வாழ்க்கைத் திறன் கல்வி


6.8 சமூகதிறன்கள்:

சிறப்பாகத் தொடர்பு கொள்ளும் திறன்.

6..8.1 தன்னை அறிதல்:



"நீ உன்னை அறிந்தால்....
நீ உன்னை அறிந்தால்...
உலகத்தில் போராடலாம்...
உயர்ந்தாலும், தாழ்ந்தாலும்....
தலை வணங்காமல் நீ வாழலாம்".

ஒரு பெண் தன்னுடைய நிறைகள், குறைகள், மதிப்பீடுகள், பார்வைகள், குணங்கள், தேவைகள், ஆசைகள், கனவுகள், உணர்வுகள் என்று அனைத்தையும் உணர்ந்து கொள்ள உதவும் திறனே தன்னை அறிதல் திறன் ஆகும்.

ஒரு பெண் தன்னைப் பற்றி இவ்வாறு முழுமையாக அலசி, ஆராய்ந்து உணர்ந்த பின்னரே எந்தச் செயல்பாட்டிலும் ஈடுபட முடியும். தன் உணர்வுகள் பற்றி முழுமையாக உணர்ந்து கொண்டவர்களால் தான் வாழ்க்கையைச் சிறப்பாக வாழ முடியும்.

6.8.2 பிறர் நிலையில் தன்னை வைத்துப் பார்த்தல்:

தன் உணர்வுகளை நங்கு உணர்ந்து கொண்ட ஒரு பெண்ணால் தான் மற்றவர்களின் உணர்வுகளை உணர இயலும். அப்படி உணரும் பொழுது அவர்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் சரிவரப் புரிந்து கொள்ளலாம். இதனால் நமக்கும், பிறருக்குமான புரிதல் வழுப்பெறுகிறது.


அனைவருக்கும் இருக்க வேண்டிய பண்பு பிறரை விமர்சனம் செய்யாமல் இருப்பதுதான். எவரையும் புரிந்துகொள்ளாமல் விமர்சனம் செய்வது என்பது எளிது. ஆனால் அது மிகவும் தவறான செயலாகும். ஒருவரைத் தெரிந்து கொள்வதற்க்கு அவர் நிலையில் நின்று, அவர் செயல்படுகளைப் புரிந்து கொள்வதே சிறந்த வழியாகும்.

6.8.3 ஒருவொருக்கொருவர் உறவு முறை:

எல்லோருக்கும் ஏதாவது ஒரு நெருக்கமான உறவில் எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கிறோம். அப்பா மகன், அப்பா மகள், தாத்தா பாட்டி, சித்தி அத்தை, மாமா நண்பர்கள் இவ்வாறு பல நெருக்கமான உறவுகளில் இருந்து கொண்டே இருக்கிறோம்.


இந்த நெருக்கமான உறவுகளைத் தொடர்ந்து ஆரோக்கியமான உறவாகப் பாரமரிக்க வேண்டியிருக்கிறது. ஒருவொருக்கொருவர் உறவோடு பழகும் திறன் மூலம், நம்மால், நெருக்கமானவர்களுடன் தொடர்ந்து நல்ல விதமாக உறவுகளை கையாள முடிகிறது. இது நம்ம மனதை ஆரோக்கியமாக வைத்து இருக்க உதவுவதோடு, சமுதாயத்திலும் நன் மதிப்புடன் செயல்பட உதவுகிறது.

6.8.4 சிறப்பாகத் தொடர்பு கொள்ளும் திறன்:

நாம் மற்றவர்களோடு தொடர்ந்து உரையாடுகிறோம். இதை நம்மால் எல்லா நேரங்களிளும் சிறப்பாகச் செய்ய முடிகிறதா ? நாம் நினைப்பதைச் சரியாக வழிப்படுத்த நமக்குத் தெரிய வேண்டும். எல்லாவற்றையும் வார்த்தைகளால் தான் வெளிப்படுத்த வேண்டும் என்பதில்லை. நம்முடைய அமைதிகூட ஒரு மொழியாகும். உடல் செய்கைகள், அசைவுகள் மூலம் நாம் நினைத்ததை வார்த்தைகள் மூலம் வெளிப்படுத்தலாம்.

உரையாடலுக்கு சொற்களும், உடலைசைவும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் பிறர் பேசும் போது காது கொடுத்து பொறுமையாக கேட்பதாகும். கேட்டல் என்பது ஒரு கலை. உற்றுக் கேட்பது பேசுபவர்களுக்கு நாம் கொடுக்கும் மரியாதை ஆகும்.


6.9 சிந்திக்கும் திறன்கள்:

கூர்சிந்தனைத் திறன்:

வாழ்க்கை நிகழ்வுகள், தகவல்கள் முதலியவற்றை எந்தச் சார்புமின்றி நடுநிலையோடு பகுத்தாய்வும் திறனே கூர்சிந்தனைத் திறனாகும். நம்முடைய சிந்தனைச் செயல்பாடு இவற்றைத் தீர்மானிக்கும் காரணிகளை எடைபோட இக்கூர்சிந்தனைத் திறன் உதவுகிறது.

ஒத்த வயதினரின் தாக்கம், மக்கள் தொடர்பு சாதனங்களின் தாக்கம், ஆகியவற்றால் அலைபாயும் மனத்தை நன்னிலைப்படுத்த கூர்சிந்தனைத் திறன் உதவுகிறது.

எதிர்கால வாழ்க்கைக்குத் தேவையான் சிறந்த முடிவுகளை எடுப்பதற்குக் கூர்சிந்தனை திறன் பயன்படும். எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் என்னென்ன, விளைவுகள் அனைத்தும் நம் விருப்பம் போல் அமையுமா, எனச் சிந்தித்துச் செயல்படக் கூர்சிந்தனைத் திறன் பயன்படுகிறது.

6.9.2 படைப்பாற்றல்:

வாழ்க்கையில் அன்றாடம் எதிர் கொள்ளும் நிகழ்ச்சிகள், சூழல்கள், சவால்களை நம்முடைய நேரடிப் பட்டறிவின் வாயிலாக மட்டுமே கையாளாமல், அவற்றையும் தாண்டிய சிந்தனையோடு கையாள உதவும் திறனையே படைப்பாற்றல் திறன் என்கிறோம்.

எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான தீர்வுகளைப் பல்வேறு கோணங்களில் சிந்தித்து முடிவெடுப்பதற்க்கு படைப்பாற்றல் திறன் தேவைப்படுகிறது.

6.9.3 முடிவெடுக்கும் திறன்:

இந்தத் திறன் ஆக்கப்பூர்வமான முறையில் முடிவுகளை எடுக்க உதவுகிறது.

நாம் எடுக்கும் வெவ்வேறு விதமான முடிவுகள் இவற்றால் ஏற்படும் தாக்கங்கள் முடிவெடுக்கும் திறங்களைப் பொறுத்தே அமைகின்றன.

குறிப்பாக வளரிளம் பருவத்தினர், முன் பின் சிந்திக்காமல் செய்யக்கூடிய சில செயல்கள், அவர்களின் உடல் நலத்திற்க்கு கேடு விளைவிக்கும். முடிவெடுக்கும் திறனை ஒருவர் பயிற்சியால் பெற்று விட்டால் அவருக்கு வானமே வசப்படும்.

6.9.4 பிரச்சனைகளுக்குத் தீர்வு காணல்:

நாம் வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சனைகளை ஆக்கப்பூர்வமான வழியில் கையாளவும், தீர்க்கவும் இத்திறன் உதவுகிறது.

பிரச்சனைகளைக கையாளாமலேயே விட்டுவிட்டால், அது பலவிதமான மன அழுத்தங்களையும், உடல் சார்ந்த சங்கடங்களையும் உருவாக்கும்.

இந்த திறன் நம் பிரச்சனைகளைக் கையாளும் வல்லமையை அளிப்பதோடு அவற்றை நம்முடைய வாய்ப்புகளாக மாற்றும் சந்தர்ப்பத்தையும் தருகிறது.

பிரச்சனைகளைத் தீர்க்கும் திறன், நம் உணர்வுகளையும் அழுத்தங்களையும் சமாளிக்க உதவுவதோடு, முடிவுகளை எடுக்கவும் உந்து சக்தியாக அமையும்.


6.10 உணர்வுகளுடனான சமரசத் திறங்கள்:

6.10.1 உணர்வுகளுக்கு ஈடு கொடுத்தல்:

எண்ணங்களின் வெளிப்பாடுகளே உணர்வுகள், நமக்குள் இருக்கும், உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளவும், இத்திறன் உதவுகிறது. மேலும் நம் உணர்வுகளை செயல்பாடுகளை எப்படியெல்லாம் பாதிக்கின்றன் என்பதை உணர்ந்து கொள்ளவும், உணர்வுகளை சரியான முறையில் எதிர்கொள்ளவும் இத்திறன் பெற்றிருப்பது இன்றியமையாததாகிறது.


6.10.2 மன அழுத்தங்களுக்கு ஈடு கொடுத்தல்:

மன அழுத்தம் என்பது ஒவ்வாத எண்ணங்கள், சிந்தனைகள், செயல்களால் ஏற்படும் மனநிலை. அதாவது ஒதுங்கியிருத்தல் கோபங்கொள்ளுதல் சமுதாய ஊட்டமின்னை, மன உளைச்சல் முதலியவற்றை சான்றாக கூறலாம்.

இவ்வாறு ஏற்படும் மன அழுத்தங்களைக் குறைக்கவும், அறவே போக்கவும் அதற்கான காரண காரியத்தைத் சிந்திக்கவும் ஆற்றல் வேண்டும்.

இத்தகைய மன அழுத்தத்திலிருந்து வெளியேறுவதற்கு மனத்தை நல் வழியில் திசை திருப்புவதும், சமுதாய நிகழ்வுகளில் கலந்து கொள்வதும், படைப்பாற்றலில் ஈடுபடுவதுமே சிறந்த வழிகளாகும்.

இவ்வாறு செய்யும் பொழுது மன அழுத்தத்தால் ஏற்படும் தீய விளைவுகள் குறையும், மன அமைதி கிட்டும்.


6.11 வாழ்க்கைத் திறன்களை ஒருங்கினைத்தல்:

வாழ்க்கைத் திறன் கல்வியின் பத்து அடிப்படைத் திறன்களையும் தனித்தனியாகத் தெரிந்து கொண்டபின்,அவற்றை ஒருங்கிணைத்தும் தொடர்புபடுத்தியும் செயல்படுத்தத தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

எடுத்துக் காட்டாகத் தன்னை அறிதலும், கூர்சிந்தனைத் திறனுமாகிய இரண்டும் இணையும் பொழுதுதான் நம்மை புரிந்து கொள்ள முடியும். அதே போல் நமக்கென்று இலக்குகளை வரையறுத்துக் கொள்வதற்குத் தன்னை அறிதல், கூர்சிந்தனைத் திறன், படைப்பாற்றல் திறன் ஆகிய மூன்றும் இணைந்த திறன் வெளிப்பாடு அவசியம்.

தன் உயர்வுகளைப் பிறருக்கிச் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டுமென்றால், அவருக்குக் கூர் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் திறன், தன்னை பிறர் நிலையில் வைத்துப் பார்க்கும் திறன் வேண்டும்.

6.12 வாழ்க்கைத் திறன் கல்வியின் பயன்கள்:

வளரிளம் பருவத்தினர் மனத்தையும், உடலையும் நலத்துடன் வைத்திருக்க வாழ்க்கைத் திறன் கல்வி பெரிதும் பயன்படுகிறது. இத்திறன்கள் பெறுவதால்,


ஆளுமை நிறைந்தவர்களாக உருவெடுப்பார்கள்.

பிறருடன் கருத்து ஒருமித்துப் பணியாற்றுவார்கள்.

சிந்தித்து முடிவெடுப்பார்கள்.

தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்வார்கள்.

இலக்குகளை அமைத்துக் கொண்டு அவற்றை அடையப் பாடுபடுவார்கள்.

இலக்குகளை அடைவதற்காக மேற்கொள்ளும் முயற்சியின் போது ஏற்படும் மன அழுத்தங்களையும், சிக்கல்களையும் எதிர் நோக்கி தீர்வுகாணும் வழி முறைகளைக் கண்டறிந்து வெற்றி வாகை சூடுவார்கள்.


பேச்சுக்கலை:

வளரிளம் பருவப் பெண்ணே, பேச்சு என்பது ஒரு கலை:

1. உண்மையே பேசுக.
2. நன்மையே பேசுக.
3. அன்பாக பேசுக.
4. மெதுவாகப் பேசுக.
5. இனிமையாகப் பேசுக.
6. சிந்தித்துப் பேசுக.
7. சமயமறிந்து பேசுக.
8. சபையறிந்து பேசுக.
9. பேசாதிருந்தும் பழகுக.


வழி-1: ஒழுக்கம்


சுய மதிப்பு:

பெற்றோரை மதித்தல், பெற்றோர் மற்றும் அறிஞர்கள் சொல் கேட்டல், படிப்பில் ஆர்வம், ஆக்கத் துறையில் ஈடுபாடு, உழைப்பு, முயற்சி, உண்மை, இலக்கு நிர்ணயித்தல், மதிப்பு நல்ல எண்ணங்கள் விளைவு...வெற்றி மற்றும் பிரகசமான வாழ்க்கை.

வழி-2: ஒழுக்கமின்மை


சுய மதிப்பின்மை:

இனக் கவர்ச்சி, ஆத்திரம், பொய் பேசுதல், திருடுதல், மதிப்பின்மை, முயற்சியின்மை, பெற்றோருக்கு கீழ்படியாமை, படிப்பில் ஆர்வமின்மை, கோபம், சோம்பல், பாட்டு மற்றும் கேளிக்கைகளில் அதிக ஆர்வம் தோல்வி விளைவு இருள் அடைந்த வாழ்க்கை.